தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் .
கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.
இன்று (டிச.28) அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. விஜயகாந்த் கடைசியாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் குவிக்கப்பட்ட போலீஸ்: முன்னதாக இன்று காலையில் இருந்தே மியாட் மருத்துவமனையில் தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியிலும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அவரது மறைவுச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் குவிந்துவிட்டனர். அங்கும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.