மதுரை மாவட்ட நகர் ஊரமைப்பு வரைவு முழுமை திட்டம் 2041 ல் வரும் காலங்களில் உள்ள இட ஒதுக்கீடு சம்பந்தமாக 06.03.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு உள்ளூர் திட்டக்குழுமம் துணை இயக்குனர் விளக்கத்துடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திட்ட வரைவுகளை துணை இயக்குனர் (LPA) அவர்கள் விளக்கமாக கூறினார்கள். அதில் பல விஷயங்கள் MSME துறையினரை அதிர்ச்சி அடையவைத்தது. அதில் முக்கியமானவையாக ஏற்கனவே தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களை தற்போது விவசாய பயன்பாட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டது அதிர்ச்சி அடையவைத்தது. அதுபற்றி விளக்கம் கேட்டபோது அவைகள் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இதுவரை வராத காரணத்தினால் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்கள். நிலவகைபாடு மாறி மாறி வரும்பட்சத்தில் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதிலும் அருகிலிருக்கும் குடியிருப்பு பகுதியினருக்கும், விவசாய துறை சார்ந்தவர்களுக்கும் தொழிற்சாலையால் அவர்களுக்கு பிரச்சனை உள்ளது என சொல்வதற்கு வாய்ப்புள்ளது.
அதன்படி தற்போது அறிவிப்பின்படி
நீக்கப்பட்ட சர்வே எண்களில் ஏதேனும் தொழிற்சாலை உள்ளதா என்பதை கண்டறியப்பட வேண்டும். ஏனெனில் ஏற்கனவே தொழிற்சாலை இருக்கும் பட்சத்தில் நிலவகைபாடு மாற்றத்தினால் பல இன்னல்களுக்கு ஆளாகும் நிலை சிறு தொழில் நடத்துபவர்களுக்கு உருவாகும்.
தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள கப்பலூர், நகரி மற்றும் நல்லுார் ஆகிய பகுதிகளில் அதிகமான சர்வே எண்கள் நீக்கப்பட்டுள்ளன.
* சிட்கோ தொழிற்பேட்டையாக கே.புதுார் மற்றும் கப்பலுலூர் தொழிற்பேட்டையும், தனியார் தொழிற்பேட்டையாக மஹியா உறங்கான்பட்டி மற்றும் வாடிப்பட்டி டெக்ஸ்டைல் பார்க் தவிர வேறு எந்த தொழிற்பேட்டைகளும் மதுரை மாவட்டத்தில் இல்லை. மேலும் இங்கு மாசுக்கட்டுபாடு துறையில் Red Category தொழிற்சாலைகள் இயங்கப்பட அனுபதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் மதுரை பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் ரப்பர் போன்ற Red Category தொழிற்சாலைகள் இதனிடையே உரிய அனுமதியுடன் இயங்குகிறது. இதுபோன்ற தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தொழிற்சாலை நிலவகைபாடு அவசியம் வேண்டும்.
ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பாட்டில் 85 கிராமங்களில் உள்ள 1526 க்கும் அதிகமான சர்வே எண்களும் 17 கிராமங்களில் உள்ள மொத்த 222 சர்வே எண்களும் நீக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் நாங்கள் வலியுறுத்தி வரும் 15% இட ஒதுக்கீடு கிடைத்தால் மட்டுமே மதுரை மாவட்டத்தில் MSME நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் சிறந்த முறையில் வளர்ச்சி பெற முடியும்.
தொழிற்சாலை நில ஒதுக்கீடாக மாநகராட்சி பகுதிகளில் 3.20 லிருந்து 3.93 ஆக உயர்த்தி 0.73 Sq km கொடுக்கப்பட்டதாகவும், கிராம பஞ்சாயத்து பகுதிகளில் 15.21 லிருந்து 29.11 ஆக உயர்த்தி 10.90 Sq km கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பில் உள்ளது. ஆனால் அதன்படி நீக்கப்பட்ட சர்வே எண்களை கணக்கிட்டால் சுமார் 1678 ஏக்கர் நீக்கப்பட்டதாக உள்ளது. அதன்படி எந்த ஒரு கூடுதலாக தொழிற்சாலை நிலவகைபாடாக அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே வரும் திட்ட வரைவில் நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் இணைக்கவும் தொழிற்சாலை இருக்கும் பகுதியில் புதிய நிலங்களை தொழிற்சாலை வகைபாட்டு நிலமாக சேர்த்து அறிவிக்குமாறு கோருகிறோம்.
இந்த நிலையில் வெளியிடப்பட்ட வரைவு (Draft) வெளிவருமேயானால் இன்னும் 20 ஆண்டுகளில் MSME இல்லாத மதுரை மாவட்டம் காட்சிப்படுத்தப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நீக்கப்பட்ட சர்வே எண்கள் இணைக்கப்படும் பட்சத்தில் மதுரை மாவட்டம் உற்பத்தி திறனிலும், பொருளாதாரத்திலும் முன்னேற வாய்ப்பு பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வெளிவிடப்பட்ட வரைவு (Draft) வருகின்ற ஏப்ரல் 7 ம் தேதி வரை வரைவு மாற்ற செய்ய கால அவகாசம் உள்ளது. உளளுர் திட்டம் குழுமம் சார்பாக கொடுத்த கால அவகாசம் போதியதாக இல்லை. இதற்கான கால அவகாசம் நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.