Madurai

நீட் தேர்வு வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம் . . .

இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு 3 மாநிலங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டுள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் மாணவிகளின் தாலியை கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள் என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

Published on

மதுரை: இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு 3 மாநிலங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ல் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தபோது பெரும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வை எழுதி உள்ளனர். ஆனால் இவர்களது முகவரியில் வெளி மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து ஏஜென்டுகள் மூலம் சிலர் மாணவர்களுக்காக தேர்வு எழுதி உள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஒரு மாணவருக்கு ஒரே நாளில் ஜார்கண்ட், உபி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் ஆள் மாறாட்டம் செய்து மூன்று தேர்வு எழுதி உள்ளனர்.

மாணவர்களுக்கு போலியாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமையிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை தேசிய தேர்வு முகமை எந்த விவரங்களையும் தரவில்லை எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு என்பது சாதாரண குற்றம் அல்ல. விசாரணை அமைப்பினர் தேவையான தகவல்களை கேட்டும் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. இது ஏற்கத்தக்கது அல்ல, எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து தேசிய தேர்வு முகமையை எதிர் மனுதாரராக சேர்க்கிறது. தேசிய தேர்வு முகமை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவது போல தெரிகிறது. அந்த அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க நேரிடும். தமிழ்நாட்டில் மாணவிகளின் தாலியைக் கூட விடாத நீங்கள், இந்தியாவிலேயே இல்லாத மாணவருக்கு 3 மாநிலங்களில் தேர்வு எழுத அனுமதித்தது எப்படி என நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் மதுரை கிளை கெடு விதித்துள்ளது. ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய மத்திய அரசின் வழக்கறிஞருக்கு நீதிபதி புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை சிபிசிஐடி இதுவரை கேட்டும் வழங்கவில்லை என நீதிபதி கண்டித்துள்ளார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால், வழக்கின் விசாரணை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2019ல் நடைபெற்ற நீட் தேர்வில் பலர் உத்தர பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி விசாரணை நடக்கிறது.

சிபிசிஐடி விசாரணையில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை மாணவர், அவரது டாக்டர் தந்தை உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர், புரோக்கராக செயல்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரகுவரன், மணி சக்தி குமார் சிம்ஹா உள்ளிட்ட 27 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அனைவரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.

Comments

Copyright © MaduraiCity WebPortal. The site is powered by Wordpress.